search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிமூலப் பெருமாள் கோவில்"

    வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான ஆதிமூலப் பெருமாள் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
    வேலவனுடன், மாமன் மாலவன் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.

    இதுதவிர எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.

    அதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

    எளிமையான இந்த வைணவ ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் மழை பெய்கின்றனர்.

    இங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.

    மூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா - ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

    சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார். கோவில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.

    குழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக இத்தலம் இருக்கிறது.

    ‘இந்த வைணவ ஆலயத்துக்கு வேறென்ன சிறப்பு?’ என வினவினால், திருமணத்தடை விலக ஏற்ற பரிகாரத் தலம் என்று பகர்கிறார்கள். வயது அதிகரித்தும் திருமணம் கூடிவராத ஆண்களும், பெண்களும் இங்கே வந்து வழிபட்டு பரிகாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமை தோறும் 16 வாரங்கள் நம்பிக்கையுடன் வர வேண்டும். முதல் வார செவ்வாய் அன்று 3 மாலைகளை வாங்கிவர வேண்டும். பெருமாள், தாயாருக்கு தலா ஒரு மாலையை அணிவித்து விட்டு, மூன்றாவது மலர் மாலையை திருமணத் தடையுள்ளவர்கள், தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒவ்வொரு செவ்வாயும் வந்து சேவித்து விட்டு, 16-வது வார செவ்வாய் அன்று முதல் வாரத்தில் செய்தது போலவே மாலை யணிந்து சுற்றிவர வேண்டும். விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி தாயாருக்கு சாற்றுவது மங்கல வாழ்வு தரும்.

    இப்படி வேண்டிக்கொள்பவர்கள், திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து, இறைவனுக்கும், இறைவிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள்.

    இது தவிர, பகைவர்கள் தொல்லை விலகவும், மரண பயம் அகலவும், தீராத பிணிகள் தீரவும், கடன் கவலை குறையவும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். கல்யாணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமையும், கடன் பிரச்சினை தீர புதன் கிழமையும், செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமையும், புத்திரப் பேறு உண்டாக ரோகிணி நட்சத்திர தினமும் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாகச் சொல்லப் படுகிறது.

    ஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் புரட்டாசி சனிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வடபழநி ஆதிலெட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில், தினமும் காலை 6.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
    ×